![Rajakannappan portfolio action change!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ddp6J9ZTzZxlfJbEx-q31Qxy1dyNpfhF4Uyt0hiXeh8/1648557569/sites/default/files/inline-images/ministe4434.jpg)
தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரின் துறைகள் முதல்வரின் கோரிக்கையை ஏற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிவர் ராஜேந்திரன். இவர் கடந்த மார்ச் மாதம் 27- ஆம் தேதி அமைச்சர் ராஜகண்ணப்பனின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றுள்ளார். அப்பொழுது அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும், வேறு மாவட்டத்திற்கு மாற்றிவிடுவேன் என மிரட்டியதாகவும் ராஜேந்திரன் புகார் தெரிவித்துள்ளார். அமைச்சரின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையினையேற்று, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரின் துறைகள் மாற்றி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது என்பதும், இதன் மூலம் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.