Skip to main content

சென்னையை சூழ்ந்த மழைநீர்... மீட்புப்பணியில் 1000 வீரர்கள்!!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

 Rainwater surrounds Chennai ... 1000 rescue workers in rescue operation!

 

நேற்று முன்தினம் (06.11.2021) இரவு முதலே சென்னையில் விட்டுவிட்டுத் தொடர்ந்து மழை பொழிவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர், ஆர்.கே. நகரில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. திருவொற்றியூரில் அண்ணாமலை நகர், கலைஞர் நகர். ராஜாஜி நகர், ராஜா சண்முகம் சாலை என முக்கிய பகுதிகளிலும் சூழ்ந்த தண்ணீர், வீடுகளுக்குள் புகுந்தது. புறநகர்ப் பகுதிகளான பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை வேண்டுமென ஆவடி மாநகராட்சி அருகே மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பத்தூர், ஆவடி ரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன. வெளியூரிலிருந்து வந்தவர்கள் அங்கிருந்து பேருந்து மூலம் வீடுகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.

 

 Rainwater surrounds Chennai ... 1000 rescue workers in rescue operation!

 

மேற்கு மாம்பலம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் பரவலாக மழை வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில் 107 பேர் இதுவரை மீட்கப்பட்டதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 86 இடங்களில் தேங்கிய தண்ணீரை மோட்டார்கள் மூலம் அகற்றியுள்ளதாகவும் 11 இடங்களில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிற மாவட்டங்களிலிருந்து 300 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் சென்னைக்கு வர உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்