நேற்று முன்தினம் (06.11.2021) இரவு முதலே சென்னையில் விட்டுவிட்டுத் தொடர்ந்து மழை பொழிவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்றும் கனமழை பொழியும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழையும், மிகக் கனமழையும் பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருக்கும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் அதி கனமழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாகச் சென்னை பெரம்பூரில் 14 சென்டி மீட்டர் மழையும், செய்யூர், மதுராந்தகம், சோழவரத்தில் தலா 13 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
வரும் 10ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது. 11ஆம் தேதி கடலூர், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவையில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.