10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி வர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அரியலூரில் ஒரு நபர் மழையின் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இறந்த நபர்களது குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிவாரணம் அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.