பேராவூரணியில்
இரயில்வே துறையால் மூடப்பட உள்ள இரயில்வே கேட்டை மாநிலங்களவை உறுப்பினர் ஆய்வு
பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியில் நூற்றாண்டு கால பயன்பாட்டில் உள்ள ஆளில்லா இரயில்வே கேட் எண்- எல்.சி.121 ஐ, தற்போது நடைபெற்று வரும் காரைக்குடி - திருவாரூர் அகல இரயில்பாதை பணியையொட்டி, நிரந்தரமாக மூடுவதாக இரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் இப்பாதையை பயன்படுத்தும் சுமார் 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இப்பகுதியில் உள்ள மருத்துவமனை, பள்ளி மற்றும் குடியிருப்புவாசிகள், விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறி, இந்த இரயில்வே கேட் பாதையை மூடக்கூடாது என இரயில்வே துறை, மாவட்ட ஆட்சியர், மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்ததோடு, ஒரு குழு அமைத்து பாதையை மீட்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை அன்று மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியருடன் வந்து சம்பந்தப்பட்ட இரயில்வே கேட்டை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இரயில்வே கேட் உபயோகிப்பாளர் குழு சார்பில் வழக்கறிஞர் மோகன், பழனிவேலு சங்கரன், யாசீன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினரிடம் தங்கள் கோரிக்கைகளை விளக்கிக் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், "இரயில்வே அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து பேசி நல்ல தீர்வு காணப்படும்" என்றார்.
அப்பொழுது பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், மாவட்ட கூட்டுறவு பால் வள சங்கத்தலைவர் காந்தி, மாநில கயறு வாரியத்தலைவர் நாடாகாடு நீலகண்டன், பட்டுக்கோட்டை கார்த்திகேயன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் உ.துரைமாணிக்கம், ஆர்.பி.ராஜேந்திரன், மா.கோ.இளங்கோ, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவடிவேல், சித்ரா, பேரூராட்சி செயல் அலுவலர் அ.கணேசன், இரயில்வே துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் சொர்ணக்காடு ஊராட்சி பட்டத்தூரணியில் மூடப்படுவதாக கூறப்படும் இரயில்வே கேட்டையும் அவர்கள் பார்வையிட்டனர்.
-இரா.பகத்சிங்