மதுபோதையில் இருந்த ரயில்வே எஸ்.ஐ ஒருவர், சட்டக் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளராக இருப்பவர் ஸ்ரீநிவாஸ் நாயக். 32 வயதான இவர், வடமாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது, தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஸ்ரீநிவாஸ் நாயக், தன்னுடைய பணி நேரத்திலும் மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், ரயில்வே சுரங்கப் பாதையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அந்த சமயம், அங்கு மதுபோதையில் நின்றுகொண்டிருந்த ஸ்ரீநிவாஸ் நாயக், அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியபடி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னுடன் பயிற்சி மேற்கொள்ளும் வழக்கறிஞர்களான திலீபன் மற்றும் அமித் ஆகியோரை அழைத்து வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த வழக்கறிஞர்கள் ஸ்ரீநிவாஸ் நாயக்கிடம் வாக்குவாதம் செய்தபோது இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தகராறில் ஒரு வழக்கறிஞருக்கு விரலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாதாரண உடையில் இருந்த ரயில்வே உதவி ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ் நாயக்கிடம் விவரங்களை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். அந்த சமயம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள், ஸ்ரீநிவாஸ் நாயக்கிற்கு தர்ம அடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த தகராறில் ரயில்வே போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர், “உங்க வீட்டு பொண்ணுங்களுக்கு இப்படி நடந்தா சும்மா இருப்பீங்களா? தமிழ்நாட்டுல இப்ப இதான் சார் நிலைமை. நீங்க இவங்கள வடநாட்டுல இருந்து கூட்டிட்டு வந்தா.. இப்படிதா பண்ணுவானுங்க” என கடுமையாக பேசினர். இது தொடர்பாக செய்தி வெளியான நிலையில், போதையில் திரிந்த ஸ்ரீநிவாஸ் நாயக் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த சக போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றி உள்ளனர். அதன்பிறகு, காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணின் வழக்கறிஞர்கள் இரு தரப்பும் சமாதானமாக சென்று மேல் நடவடிக்கை வேண்டாம் என எழுதிக் கொடுத்ததாக தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அந்த ரயில்வே எஸ்.ஐ. ஸ்ரீநிவாஸ் நாயக் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவரது பெற்றோர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அதே சமயம், மதுபோதையில் இருந்த ரயில்வே எஸ்.ஐ இளம்பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.