ராகுலுக்கு கி.வீரமணி வாழ்த்து
காங்கிரசுக் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம்:
’’இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தாங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இளைய தலைமுறையினர் நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டும். காங்கிரசு கட்சியின் தலைவராக நீங்கள் வழிநடத்துவது மிகவும் சரியானது.
1925ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவிய எங்களது ஆசான் தந்தை பெரியார் (1879 - 1973) அவர்கள் தேசப்பிதா என மதிக்கப் பெற்ற காந்தியார் தொடங்கி, மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி என உங்களது குடும்ப மூதாதையர் - தலைவர்களுடன் பழகியவர்; அவர்களுக்குப்பரிச்சய மானவர். உங்களது தந்தையார் ராஜீவ்காந்தி அவர்கள் 1982ஆம் ஆண்டில் காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான பின் முதன் முறையாக தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது எங்களது திராவிடர் கழகத் தலைமையிடமான பெரியார் திடலுக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரால் நிறுவப்பட்ட திராவிடர் கழகம், திராவிடர் இயக்கத்தின் அரசியல் அமைப்புகளான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தாய் அமைப்பு என்பதை குறிப்பிட வேண்டியதில்லை. ஆனால் திராவிடர் கழகம் ஓர் அரசியல் அமைப்பல்ல; சமூக இயக்கமாகும்.
லட்சியப் பார்வையுடன் கூடிய உங்களது தலைமை நம் நாட்டிற்கு தேவைப்படுகிறது. காங்கிரசுக் கட்சிக்கும் நாட்டிற்கும் உரிய பணியினையும், கடமைகளையும் நீங்கள் ஆற்றிடுவீர்கள் என்பதில் பெரும்நம்பிக்கை கொண்டுள்ளோம்.
உங்களது பெருமைமிகு குடும்பத்தின் அறிவார்ந்த அணுகு முறையில் நம் நாடும் மக்களும் மேம்பாடு அடைந்திட வேண்டும்.
நாட்டின் மதச்சார்பின்மை, சமூகநீதி, சுயமரியாதை - மனித நேயம், ஆகிய உயரிய நன்னெறிகள் உங்களது ஆளுமை மிக்க தலைமையால் மேலும் பலப்பட வேண்டும். நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்புகளை செவ்வனே செய்து வெற்றி யடைந்திட வாழ்த்துகிறோம்.’’