கடலூரில் மீன் மார்க்கெட்டில் வியாபாரிகளும் பொதுமக்களும் சமூக இடைவெளி இன்றி குவிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த மார்ச்சில் இருந்து இந்த மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட 25,706 நபர்களுக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை 30,422 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடலூரில் முதல் அலையில் 296 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டாம் அலையில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 423 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அளவு பாதிப்பின் காரணமாக கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் இருக்கிறது. ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் மீன்பிடி தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்த நிலையில், அந்த மீனை வாங்க இன்று கடலோரப் பகுதியில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இன்று கூட்டம் கடுமையாக இருந்தது. மீன் வரத்து குறைவு என்பதால் மீன் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் இன்று அதிகாலையில் இருந்து பொதுமக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். இதனால் அங்கு தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. தொடர்ந்து போலீசார் தரப்பில் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு வருகிறது.