Skip to main content

விதிகளை மீறி செயல்படும் கல்குவாரி; ஆட்சியர் அலுவலகத்திற்கு படையெடுத்த கிராம மக்கள்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Calquary operating in violation of the rules; Villagers invaded the Collectorate

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீரென வந்த கிராம மக்கள், விதிமுறை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கரடிக்குடி கிராமத்தில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு சிலர் குறிப்பிட்ட காலத்திற்கு கல் உடைத்து எடுக்க அரசிடம் கல்குவாரி அனுமதிக்கான உரிமத்தை பெற்று கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்கின்றனர். அரசின் விதிகளை மீறி தினமும் 24 மணி நேரமும் கல் உடைத்து எடுப்பதாகவும். இரவு நேரங்களில் அதிகப்படியான கனத்த ஒலி எழுப்பக்கூடிய வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை வெடிக்கச் செய்கிறார்கள்.

இதனால் இரவில் தூங்க முடியவில்லை, வயதானவர்கள் இந்த சத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், பயப்படுகின்றனர். மருத்துவ நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் தங்கள் கிராமத்தின் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு குடிநீர் ஆதாரமும் பாதிக்கிறது. விதிகளை மீறி அரசுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தும் விதமாக வெடிவைத்து மலையை வெட்டி எடுத்து செல்கின்றனர். இதனை ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தனர்.

முன்னதாக கரடிக்குடி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் திடீரென வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அங்கு நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்ததைக் கண்டு ஒரே பிரச்சனைக்கு அவ்வளவு பொதுமக்கள் கூடியதைப் பார்த்து அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். அதன்பின் போலீசாரை வைத்து முக்கியமானவர்கள் மட்டும் பேசுங்கள் எனச்சொல்லி அவர்களை மட்டும் உள்ளே இருந்து மனு தரச்செய்தனர். 

சார்ந்த செய்திகள்