தமிழக பாஜக விவசாய அணியின் கோவை மாவட்ட பெருந்கோட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று கோவையில் நடந்தது. பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். பாஜகவின் தேசிய மாநில செயற்குழு உறுப்பினர் சசி மௌலி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக கள் இயக்கத்தின் தலைவர் நல்லுசாமி, விவசாய அணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் விஜயராகவன், மாநில துணைத் தலைவர்கள் மணி முத்தையா, முத்துராமன், ஜீவா சிவக்குமார், கோவிந்தன், மாநில செயலாளர் ஜெயக்குமார், கோட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் , நிர்வாகிகள், முன்னோடிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் தற்போது சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள், நீண்ட வருடங்களாக தமிழக அரசு கிடப்பில் வைத்திருக்கும் நீராதார திட்டங்கள், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைகள், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அந்த திட்டத்தில் நடந்து வரும் முறைகேடுகள், விவசாயப் பொருட்களின் கடுமையான விலை வீழ்ச்சி, விவசாயத்தை அழிக்க வந்துள்ள புதிய தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன. இவைகளுக்கு தீர்வுகாண மாநில தழுவிய விவசாய போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது.
பாஜக விவசாய அணி சார்பில் மாநில தழுவிய ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் கலந்தாலோசிக்க திட்டமிட்டிருக்கிறார்.