பணியிலிருந்த ரயில்வேயின் இளம் பெண் ஊழியரிடம் அத்துமீறி அவரைச் சிதைக்கும் வகையில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தென்மாவட்டங்களில் அதிர்வலைகளைக் கிளப்பியிருந்த நிலையில் அது தொடர்பான மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தின் தென்காசி சமீபமாக உள்ள பாவூர்சத்திரம் நகரின் தேசிய நெடுஞ்சாலையில் மெயின் ரயில்வே கேட் உள்ளது. இதன் கேட் கீப்பர் பணியிலிருப்பவர் அண்டையிலுள்ள கேரள மாநிலத்தின் கொல்லம் நகரைச் சேர்ந்த 30 வயதான இளம்பெண். (நீதிமன்றத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படம் தவிர்க்கப்பட்டுள்ளன)
திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் வெளியூரில் பணிபுரிந்து வருபவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கேட் கீப்பர் பணிக்காக வந்த இந்த இளம்பெண் பாவூர்சத்திரத்தில் தன் தாயுடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். நெல்லை-செங்கோட்டை புனலூர், கொல்லம் என்று ரயில்களின் போக்குவரத்துகளைக் கொண்ட மெயின்லைன் வழியானது பாவூர்சத்திரம் ரயில்வே கேட். எனினும் நகரையொட்டிய பகுதி என்பதால் ஓரளவு ஜன நடமாட்டமும் கொண்டது.
பிற துறைகளில் பெண் ஊழியர்களுக்கென்று இரவுப்பணி தவிர்த்து பணியின் காலஅளவு கடைப்பிடிக்கிற வழக்கமிருப்பதைப் போன்று ரயில்வே துறையில் அந்த நியாய தர்மங்கள் பின்பற்றப்படுவது கிடையாது. இரவைப் பகலாக்கும் நகரம் என்றாலும், அடர் இருட்டைக் கொண்ட ரிமோட் பகுதி என்றாலும், ரயில்வே துறையில் அதுவும் கேட் கீப்பர் வேலை என்றாலும் பெண்களுக்கு இரவு மற்றும் பகல் நேர ஷிப்ட்கள் தவிர்க்க முடியாதது என்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வழக்கம்போல் இரவுப் பணிக்கு வந்துள்ளார் பெண் ஊழியர். அன்றைய தினம் இரவு சுமார் 8.30 மணிக்கு நெல்லை-செங்கோட்டை செல்கிற ரயில் அப்பகுதியைக் கடந்த போது ரயில்வே கேட் கீப்பிங் பணியை முடித்தவர், அடுத்ததாக நடு இரவு 12.30 மணிவாக்கில் அந்த வழியில் கடக்கவிருக்கிற நெல்லை–கொல்லம் மெயிலுக்கான கேட்கீப்பிங் பணியின் பொருட்டு அங்குள்ள தனது ரெஸ்ட் ரூமுக்கு போயிருக்கிறார்.
அதுசமயம் எதிர்பாராமல் திடீரென சட்டை அணியாமல் வந்த மர்ம நபர் ஒருவர், அறைக்குள் தடாலடியாய் புகுந்தவர் பெண் ஊழியரைப் பாலியல் வன்கொடுமை செய்து, சிதைக்கிற முயற்சியில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டவன், அப்பெண் ஊழியரை மல்லுக்கட்டியிருக்கிறான். ஆனாலும் அதிர்ந்து போன பெண் ஊழியர் தன் தைரியத்தை விடாமல், அவனோடு எதிர்த்துப் போராடியிருக்கிறார். ஆளரவமற்ற ஏரியா என்றாலும், பெண் ஊழியருக்கும் அவனுக்குமிடையே பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. ஒரு லெவலுக்கு மேல் போனதும் பதறிய பெண் ஊழியர், காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டுள்ளார். இதனால் பீதியாகிப் போனவன் அருகிலிருந்த தொலைபேசியால் பெண் ஊழியரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியிருக்கிறான்.
இந்தப் போராட்டத்தில் பெண் ஊழியருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே பெண் ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு பதறிப் போய் வந்த பொது மக்களும், ரயில்வே ஊழியர்கள் சிலரும் அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள். தன் உறவினர் உதவியுடன் பாவூர்சத்திரம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் பின்னர் காலையில் நெல்லையிலுள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கிறார்.
விடிந்த பிறகே போலீசுக்குத் தகவல் தெரியவர, தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சாம்சன், டி.எஸ்.பி.சகாய ஜோஸ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பதற்றத்துடன் சம்பவ இடம் வந்தவர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
எனினும் போலீசாரின் விசாரணை வேகமெடுத்துள்ளனவாம். ரயில்வே கேட் மற்றும் வழியோரப் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் சட்டை அணியாமல் வந்த மர்ம நபரின் உருவம் பதிந்துள்ளதா என போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வந்த போதிலும் ரயில்வே கேட் அருகிலுள்ள நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. அந்தப் பணிக்காக ரயில்வே கேட்டின் அருகில் வடமாநிலத் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடாரம் அமைத்து தங்கி வேலையில் ஈடுபட்டுள்ளனர். வாய்ப்பைப் பயன்படுத்தி பெண் ஊழியரின் பணிநேரத்தை நோட்டமிட்டு இவர்களில் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டுள்ளனரா அல்லது உள்ளூர் நபரின் ஈடுபாடா என்ற கோணத்திலும் விசாரணை போகிறது. ஏனெனில் பெண் ஊழியரின் தனிமையைப் பல நாட்கள் கண்காணிக்காமல், சம்பவம் நடக்க சாத்தியமில்லை என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
வன்கொடுமை குறித்து வழக்குப் பதிவு செய்த தென்காசி ரயில்வே போலீசாரிடம், “வந்தவனை எனக்கு நல்லா தெரியும். ஒல்லியாயிருப்பான். சட்டை போடல. காக்கி கலர் பேண்ட் போட்டிருந்தான். முரட்டுத்தனமா நடந்துக்கிட்டவனிடம் என்னைக் காப்பாற்ற முழு பலத்துடன் போராடினேன். போதையிலிருந்தவன், வெளியே சொன்னா கொன்னுடுவேன்னு மெரட்டினான். ஆளைப் பார்த்தால் அடையாளம் சொல்லிவிடுவேன்” என ஒரு சில அடையாளங்களைச் சொல்லி வாக்குமூலமே கொடுத்திருந்தார் அந்த பெண் ஊழியர்.
11 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார் சில அடையாளங்களோடு வந்த மர்ம நபர் அங்கு விட்டுச் சென்ற அவனது ஒற்றைச் செருப்பைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அதில் பெயிண்ட் அப்பியிருந்தது. இதனை வைத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கேட் கீப்பர் இளம்பெண் தெரிவித்த அடையாளங்களைக் கொண்டு தென்காசி ரயில்வே போலீசார் அப்பகுதியின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்திருக்கிறார்கள்.
நல்வாய்ப்பாக சொல்லப்பட்ட அடையாளம் கொண்டவனின் பதிவான காட்சியை போலீசார் அந்த இளம்பெண்ணிடம் காட்டியிருக்கிறார்கள். அவரும் வந்தவன் அவன் தான் என்று உறுதி செய்திருக்கிறார். மேலும் தீவிர விசாரணையில் அவனுடைய பெயிண்ட் படிந்த செருப்பின் அடையாளத்தைக் கொண்டு பெயிண்ட் அடிப்பவன் என்ற முடிவுக்கு வந்த போலீஸ் அப்பகுதியின் தொழிலாளிகளிடம் விசாரித்திருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு பாவூர்சத்திரத்தில் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு தங்கி பெயிண்டிங் தொழில் செய்து வந்த கேரளாவின் கொல்லம் பக்கம் உள்ளவன், சம்பவத்திற்குப் பின் காணாமல் போனது தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்தே ரயில்வே போலீசின் தனிப்படை கொல்லம் விரைந்தார்கள். கொல்லம் மாநகர காவல் நிலையத்தில் அடையாளங்களைக் காட்டி விசாரித்ததில், அவனது பெயர் அனீஸ் (28). வாலிபனான இவன் மீது கொல்லம் மற்றும் சுற்றுப்புற காவல் நிலையங்களில் பாலியல் வழக்குகள் உள்ளன. குறிப்பாக கொல்லம் பகுதியை ஒட்டிய குன்னிக்கோடு காவல் நிலையத்தில் குற்ற எண் 1355/18-ன் படி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி தண்டனையடைந்தவன். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வெளியே வந்தான் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்தே கேரள போலீசாரின் உதவியுடன் பிப்ரவரி 19 இரவு பத்னாபுரம் தாலுகாவிலிருக்கும் வாழவிளை வென்சேம்பு ஊரிலுள்ள அவனது வீட்டிலிருந்த அனீஸை மடக்கிக் கொண்டு வந்த ரயில்வேயின் தனிப்படையினர் விசாரணைக்குப் பின் தென்காசியிலுள்ள ஜே.எம்.கோர்ட்டில் ஆஐர்படுத்தி ரிமாண்ட் செய்திருக்கிறார்கள்.