சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலை பல்கலை கழக ஊழியர் சங்க தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் பழனிவேல் உள்பட ஊழியர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசுகையில், “அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக 3 ஆண்டுகளாக பணியாற்றி 3-ந் தேதி ஓய்வு பெறும் துணைவேந்தர் முருகேசன் பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத அலுவலர் ஊழியர்களுக்கு எந்த நன்மையும் எந்த பதவி உயர்வும் அளிக்கவில்லை.
அதுபோல் கடந்த ஆறு வருடங்களில் பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஊழியர்களுக்கு 50% தான் பணி பயன் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் தொகை இதுவரை கொடுக்கப்படவில்லை. கடந்த ஆறு வருடங்களில் 200-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அலுவலர் ஊழியர்கள் இறந்துவிட்டனர். துணைவேந்தர் முருகேசன் பணிக்காலத்தை வீணடித்து எந்த வளர்ச்சி திட்டத்தையும் பல்கலைக்கழகத்தில் செய்யவில்லை. தொலைதூர கல்வி இயக்ககத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால் தற்பொழுது 50 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை தான் உள்ளது. அதுபோல் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிட பராமரிப்பு மோசமான நிலையில் உள்ளது.
மருத்துவமனையில் போதுமான ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யும்பொழுது பல்கலைக்கழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் துணைவேந்தராக நியமிக்க தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக தமிழக முதல்வர் உள்பட அமைச்சர்களை ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக” கூறினார்கள்.