கடந்த 29 ந் தேதி திருவரங்கம் - வளநாடுக்கு இடைப்பட்ட தைலமரக் காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்துகிடந்தது. காருக்குள் கவரிங் நகைகளும் பல ஆவணங்களும் எரிந்துகிடந்தது. நீண்ட தேடலுக்கு பிறகு கார் திருக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவுக்கு சொந்தமானது என்பதும் மாரிமுத்து புதுக்கோட்டை பஞ்சாப் நேசனல் வங்கியில் அலுவலக உதவியாளராக வேலை செய்தவர் என்பதும் தெரிய வந்தது.
![p](http://image.nakkheeran.in/cdn/farfuture/bUT8ZDA82I8huj74Mrrj9n8wkm12csGfC_KcO86IR5k/1556796594/sites/default/files/inline-images/punjap2.jpg)
இந்த நிலையில் மாரிமுத்து மனைவி ராணி தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்தார். அதன் பிறகு வங்கியில் பல்வேறுகட்ட சோதனைகள் செய்யப்பட்டு அதிகாரிகள் பல நாட்களாக ஆய்வு செய்த நிலையில் சுமார் 15 கிலோவுக்கு மேல் வாடிக்கை யாளர்களின் நகைகளை காணவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.
இந்த தகவல் வேகமாக பரவியதால் வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்தனர். அடமானம் வைக்கும் போது வழங்கப்பட்ட அட்டைகளை வைத்து நகைகள் உள்ளதா என்று சோதனை செய்த போது பலரது நகைகளை காணவில்லை என்றும் நகைக்கு பதில் பணம் வாங்கிக்கலாம் என்று வங்கி நிர்வாகம் சாதாரணமாக பதில் சொல்லி வருகின்றனர்.
![p](http://image.nakkheeran.in/cdn/farfuture/3u0BehcPLDgzMC2YYnrhYk5pSTGV4RHMHvKpQphzzkk/1556796608/sites/default/files/inline-images/punjap1.jpg)
ராசாங்கம் என்ற வாடிக்கையாளர்.. நான் 2 முறை நகைகளை அடகு வைத்தேன். ஒரு அட்டைக்கான நகை இருக்கிறதாம். இன்னொரு அட்டைக்கான நகையை காணவில்லை என்கிறார்கள். பணம் வாங்கிக்கலாம் என்கிறார்கள். அரசு மதிப்பில் குறைவான தொகை தான் பணமாக . அதில் எப்படி நகை வாங்க முடியும். அதனால் எங்கள் நகை என்னவோ அதே போன்ற பொருளை வாங்கித் தர வேண்டும் என்றார்.
மேலும் பல வாடிக்கையாளர்களோ.. மாரிமுத்து அலுவலக உதவியளர் தான். இப்ப அவரை தலைமறைவாக்கிவிட்டு மொத்த பலியையும் அவர் மேல போட வங்கி நிர்வாகம் திட்டமிட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. அதாவது நகைகளை வைப்பது எடுப்பது எல்லாமே உயர் அதிகாரிகள் தான் அப்பறம் எப்படி இவ்வளவு நகைகளை மாரிமுத்து மட்டும் எடுத்திருக்க முடியும். அதிகாரிகளின் துணையும் இருக்கும். கண்காணிப்பு கேமராக்களை பார்க்க வேண்டும். அதையும் அழிச்சுட்டு போயிட்டார் என்றும் கூட சொல்லலாம் என்றனர்.
![p](http://image.nakkheeran.in/cdn/farfuture/cOcF78FLRm9ByN90j4Ong9xSAQJi1-tvM94yrzveTwE/1556796640/sites/default/files/inline-images/pun.jpg)
மாரிமுத்து உறவினர்களோ.. வங்கி அலுவலக ஊழியர் தான். இவ்வளவு நகைகளை எடுத்துக்கொண்டு, காரை எரிச்சுட்டு தலைமறைவாகிவிட்டதா சொல்றாங்க. ஆனா மாரிமுத்துவோட கணக்கை முடிக்க அவரை ஏதாவது செய்து கார் கிடந்த பகுதியில் உள்ள ஆழமான பழைய உருக்கு குழிகளுக்குள் தள்ளியிருப்பார்களோ என்ற சந்தேகமும் உள்ளது. அதனால் போலிசார் பாகுபாடு பார்க்காமல் விசாரனை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர்.
இந்த சம்பவத்தினால் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை பரபரப்பாகவே உள்ளது.