புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக ஒருவகையான உயிர்க்கொல்லி விஷத்தை பலர் சாப்பிட்டு, சிகிச்சையளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனால் அந்த வகை விஷத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கேயும் விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை அமலில் இருந்தாலும் பூச்சிமருந்துக் கடைகள், பெட்டிக்கடைகளில் தற்போது வரை தாராளமாகக் கிடைப்பதால் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த நாளிலேயே +2 மாணவன் ஒருவர் விஷம் தின்று ஆபத்தான நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளி தனது மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழியில் படிக்க வைத்துள்ளார். தற்போது +2 படிக்கும் அந்த மாணவன் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவராக இருந்துள்ளார். அரையாண்டு தேர்வு எழுதி விடுமுறை முடிந்து திங்கட்கிழமை மகிழ்ச்சியாக சக மாணவர்களுடன் பள்ளிக்கு வந்துள்ளார்.
தேர்வுத் தாள்கள் வழங்கப்பட்ட நிலையில், 600-க்கு 487 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற மனநிலைக்குச் சென்ற மாணவன் மாலை வழக்கமாக பேருந்து நிலையம் செல்லும் நண்பர்களுடன் போகவில்லை. ஆனால், ஊருக்குப் போக வழக்கமான குறிப்பிட்ட பேருந்தில் நண்பர்களுடன் ஏறி அமர்ந்த மாணவனுக்கு அரைமணி நேரத்தில் நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, மயக்கம் வருவதாகச் சொல்ல சக மாணவர்கள் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் இறக்கி சிகிச்சைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது தான் தெரிந்துள்ளது மாணவன் அந்த விஷத்தைத் தின்றது.
அன்னவாசலில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பரிசோதனைகளில் மாணவன் குடலில் விஷம் ஒட்டியுள்ளது தெரியவந்துள்ளது. மாணவன் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பள்ளி முடிந்து சக மாணவர்களுடன் வரவேண்டிய மாணவன் மதிப்பெண் குறைந்ததை நினைத்து தனியாக வந்து பேருந்து நிலையம் செல்லும் முன்பு உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனை அருகே உள்ள பூச்சிமருந்துக் கடையில் விஷம் வாங்கி அங்கேயே சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு பேருந்து ஏறச் சென்றுள்ளார். மாவட்டம் முழுவதும் இந்த விஷம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சாதாரணமாக பள்ளிச்சீருடையில் வந்த மாணவனுக்கு எப்படி விஷம் விற்றார்கள்? மனித உயிர்களை விட 10, 20 ரூபாய் முக்கியமாகிவிட்டதா? இந்தப் பிரச்சனையில் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம். மேலும், மாணவனுக்கு உயர் சிகிச்சை அளித்து உயிரைக் காக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.