புதுக்கோட்டையில் தடையை மீறி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மஞ்சுவிரட்டு ஏற்பாட்டாளர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தடையை மீறி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டது. மக்கள் பலரும் திடலில் குவிந்திருந்தனர். கூட்டத்தில் அவிழ்த்து விடப்பட்ட காளையை வீரர்கள் அடக்க முயற்சித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாகக் காளை மாடு முட்டியதில் கருப்பையா என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அறிந்த காவல்துறையினர் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துசென்றனர். அதேபோல் இந்த மஞ்சுவிரட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் மஞ்சுவிரட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்திய ஏற்பாட்டாளர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.