புதுக்கோட்டை மாவட்டம் நாடாளுமன்ற தொகுதி என்ற அந்தஸ்தை இழந்து 3 வது தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சட்டமன்றத் தொகுதி மட்டும் கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை பா.ஜ.க வுக்கும், திருச்சி தொகுதி தே.மு.தி.க வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக விழாவிற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். கரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை விராலிமலை தான் என் தொகுதிக்குள் வருகிறது. அதனால் புதுக்கோட்டைக்கு வரவில்லை என்று மறுத்துவிட்டார். அதேபோல ராமநாதபுரம் தொகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி வந்தாலும் கூட்டணி கட்சியான பா.ஜ.க வேட்பாளர் வரவில்லை.
ஆனால் திருச்சி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டக்டர் ஆர்.இளங்கோவனும், தலைமை அறிவிக்காமலேயே சிவகங்கைத் தொகுதியில் தன்னை தானே வேட்பாளராக அறிவித்துக் கொண்ட எச்.ராஜாவும் வியாழக் கிழமையன்று புதுக்கோட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வந்தனர். இவர்களை வரவேற்க அ.தி.மு.க மகளிரணியிரனர் குத்தாடம் போட்டு வரவேற்றனர். அறிமுக கூட்டத்தில் திருச்சி தொகுதி வேட்பாளர் இளங்கோவனை அறிமுகப்படுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் நாங்கள் இருவரும் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையுடன் வேட்பாளரை பேசும்படி அழைத்தார்.
தொடர்ந்து பேசிய இளங்கோவன், “நான் ஒன்னரை வருடமும், எனது மனைவி 10 வருடமும் இந்த மாவட்டத்தில் மருத்துவத் தொழில் செய்துள்ளோம். நான் மிக மிகக் குறைந்த அளவிலேயே சிகிச்சைக்கு கட்டணமாகப் பெறுவேன். அதிலும் பல பேர் எனக்கு காசு கொடுக்காமலேயே ஏமாற்றி விடுவார்கள். அந்த வகையில் நமது அமைச்சரைப் போலவே நானும் ஒரு ஏமாளி டாக்டர்” என்றார். இதைக் கேட்ட ர.ர.க்கள் யாரு ஏமாளி என்று சிரித்துக் கொண்டனர்.
தொடர்ந்து பேசிய எச்.ராஜா.. இந்த கூட்டணி இயற்கையாகவே அமைந்த கூட்டணி. அதனாலதான் பா.ம.க வந்ததும் தி.மு.கவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தி.மு.க ஒரு தீய சக்தி என்றார் வழக்கம் போல. தொடர்ந்து கோயிலில் தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.
கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கூட்டணி கட்சிகளின் கொடிகளை தங்கள் காரில் பறக்கவிட்டு செல்வதால் கூட்டணி கட்சியினர் மன நிறைவுடன் தேர்தல் பணி செய்வார்கள் ஆனால் தே.மு.தி.க வேட்பாளர் அனைத்து கொடிகளையும் பறக்கவிட்டு வந்தார். ஆனால் எச்.ராஜா மட்டும் பா.ஜ.க கொடியுடன் வந்தார். இது பற்றி அங்கிருந்த சிலர் நம்மிடம்.. அண்ணன் பா.ஜ.க கொடி தவிற வேறு கொடிகளை தன் காரில் கட்டமாட்டார் என்றனர். அப்பறம் எப்படி கூட்டணியை அரவணைத்து போவார் எச் ராஜா.