பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தைகள் இருக்கும் அறையில் இருந்து 30 அடி தூரத்தில் கரோனா தொற்றுள்ளவர்களுக்கான சிகிச்சை வார்டு அமைத்திருப்பது புதுக்கோட்டை மக்களுக்கு வேதனையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கையை ஏற்று கரோனா வார்டை வேறு இடத்திற்கு மாற்றியமைத்துள்ளார் ஆட்சியர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும்போது, அவர்களை தங்க வைத்து சிகிச்சை அளிக்க புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சுமார் 700 படுக்கைகளும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனையில் 200 படுக்கைகளும் தயாராக உள்ளன என்று மருத்துவக்குழுவினர் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் கூறினார்கள்.
தற்போது கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ராணியார் மருத்துவமனையில் சுமார் 200 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், 500 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. பின்னர் எதற்காக சுகாதாரப் பணிகள் இணை இயங்குநர் (பொ) மலர்விழி அவசரமாக ஆட்சியரிடம் அனுமதி பெற்று அறந்தாங்கி குழந்தைகள் வார்டுக்கு அருகே கரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதி பெற்றார் என்று கேள்வி எழுந்துள்ளது.
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளில் சிசு இறப்புகளே இல்லாமல், சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளார்கள் என்று பெருமையாக அமைச்சர் விஜயபாஸ்கர் முன்பு மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தார்கள். ஒவ்வொரு மாதமும் சுமார் 390 முதல் 400 குழந்தைகள் பிறக்கின்றன. இப்படியான மருத்துவமனையை கரோனா வார்டாக மாற்றுவதைத்தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.
கரோனா தொற்று சிகிச்சை மையமாக பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி இடங்களை தேர்வு செய்தவர்கள் ஏன் இப்படி குழந்தைகள் வார்டு அருகே மாற்றிக் கொண்டார்கள் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
இது குறித்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறும் போது,
“கரோனா சிகிச்சை நல்ல முறையில் அளிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. குழந்தைகள் வார்டுக்கு அருகே கரோனா வார்டு அமைப்பதைத்தான் எதிர்க்கிறோம். கரோனா வார்டுக்கு போக குழந்தைகள் வார்டு வழியாகத்தான் போக வேண்டும். குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கவனித்து கொள்ளும் உறவினர்கள் அந்த வழியில்தான் அமர்ந்திருப்பார்கள். கரோனா ஆம்புலன்ஸ் போகும்போது அதிலிருந்து காற்றில் உறவினர்களுக்கு தொற்று ஏற்பட்டு வார்டில் இருக்கும் தாய்க்கும், சேய்க்கும் தொற்றுபரவாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?”
“இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டபோது மறு பரிசீலனை செய்வதாக கூறினார்கள். ஆனால் ஆட்சியரிடம் தவறான தகவல் கொடுத்து அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. இரவில் பல கரோனா தொற்று உள்ளவர்களை கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அதனால் சி.பி.எம். இரவில் தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளது. மறுபடியும் வார்டு மாற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியின் கவனத்திற்கு தகவல் சென்றதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குழந்தைகள் வார்டு அருகில் அமைக்கப்பட்டிருந்த கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேரும் இன்று செவ்வாய் கிழமை 8 மணி முதல் ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதனால் நிம்மதியடைந்த மக்கள் ஆட்சியருக்கு நன்றி கூறி வருகின்றனர். பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்த தயாரான தோழர்களும் ஆட்சியர் நடவடிக்கையை பாராட்டி கலைந்து சென்றனர்.
அதன்பிறகு ஜெ.டி. (பொ) மலர்விழி மாற்று இடம் பார்ப்பதற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கல்லனேந்தல் அரசு கலைக்கல்லூரிகளை ஆய்வு செய்து வருகிறார்.
அதேபோல கரோனா பரிசோதனை செய்ய எடுக்கப்படும் மாதிரிகள் பிரசவ வார்டுக்குள் உள்ள மைக்ரோ லேபில்தான் பாதுகாக்கப்பட்டு, மாலையில் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் அதே மருத்துவமனையில் மற்றொரு கட்டிடத்தில் மாதிரிகளை வைத்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.