Skip to main content

ஆக்கிரமிப்பை அகற்ற நூதன முறையில் போராட்டம்; அதிகாரிகள் பேச்சுவார்த்தை  

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

pudukkottai viralimalai water encroachment incident
மாதிரி படம்

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலர் ஆக்கிரமித்து வணிக கடை, குடியிருப்பு என கட்டி நீண்ட நாட்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் காந்தியவாதி செல்வராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருமாறு வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு அறிவுரை வழங்கி இருந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன், ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நீதிமன்றத்திற்குச் சென்று குறிப்பிட்ட கால தடை ஆணை பெற்றனர். இதனையடுத்து தற்போது அந்த தடை ஆணையின் காலம் முடிந்ததால் உடனடியாக அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருமாறு கோரி காந்தியவாதி செல்வராஜ் என்பவர் கையில் தேசியக் கொடியுடன் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிர்புறம் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி படிகளில் ஏறி அவர் பின்னால் சென்று அவரைப் பிடித்து பின்பு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவரது கோரிக்கை தொடர்பாகப் பேச்சுவார்த்தை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்