புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ‘நாங்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறோம். 'பீடியாட்ரிக்ஸ்' பாடத்தில் நாங்கள் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழகம் மாணவர்களுடைய தேர்வு மதிப்பெண்ணைக் கணக்கிடுவதில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறையைப் பின்பற்றவில்லை. உச்சநீதிமன்றம், மருத்துவ கவுன்சில் விதிமுறைகளையே பின்பற்றவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே, மாணவர்கள் 'தேர்ச்சி' பெற்றதாக அறிவிக்கவேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள், நீதியரசர் ஆர்.சுப்பிரமணியன் அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக, வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், அதனைப் பின்பற்றி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையிலும், மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, புதுவைப் பல்கலைக்கழகம், மனுதாரர்கள், ஒரு பாடத்தில் தேர்ச்சியடையவில்லை என்று அறிவித்ததை ரத்து செய்து, அவர்கள் அந்தப் பாடத்தில்‘தேர்ச்சி’ பெற்றதாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.