மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தவுடன் தமிழக மது பிரியர்கள் மட்டுமல்ல, புதுச்சேரி பார்டலில் உள்ள மதுப் பிரியர்களும் குஷியாகிவிட்டனர்.
பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாண்டிச்சேரி செல்வதே பெரும்பாலும் மது அருந்ததான். அதிலும் பக்கத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பலர் அடிக்கடி மது அருந்த செல்வார்கள். கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டதால் தமிழ்நாட்டைப்போல புதுச்சேரியிலும் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் மே 7ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. நேற்று காலை முதலே புதுச்சேரி எல்லையில் இருப்பவர்கள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லைக்கு நுழைந்தனர். அங்கு தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் மூலம் மதுபானங்களை வாங்கினர். வரிசையில் கால் வலிக்க நின்று மதுபானங்களை வாங்கிய சிலர், அதனை கூடுதல் விலைக்கும் விற்றனர். அதனையும் புதுச்சேரியில் இருந்து வந்தவர்கள் வாங்கிச் சென்றனர்.
புதுச்சேரியில் இருந்து வந்தவர்களை, வழக்கமாக நாங்கதான் அங்க வருவோம், இப்ப புதுசா நீங்க வர்றீங்க என கிண்டல் அடித்துள்ளனர் இங்குள்ளவர்கள்.