புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பிரசவத்திற்காக அதிகமாகக் கர்ப்பிணிகள் வரும் மருத்துவமனை, புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை. ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 பேருக்குப் பிரசவம் நடக்கிறது. சிலர் சுகப்பிரசவம் என்றாலும், பலருக்கு அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடக்கிறது. எப்போதாவது ஒருவருக்கு அறுவை சிகிச்சையின்போது பிரச்சனை ஏற்பட்டால், தஞ்சை இராஜாமிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்புவது வழக்கம். ஆனால், கடந்த 10 நாட்களில் சுமார் 4 கர்ப்பிணிப் பெண்கள் மரணமடைந்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மருத்துவ வட்டாரத்தில் விசாரித்த போது, ‘இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு 18 மருத்துவர்கள் வேண்டும். அதாவது ஒரு நேரத்திற்கு 6 மருத்துவர்கள் வீதம் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். இவர்கள் முன்னதாக திட்டமிட்ட அறுவை சிகிச்சையும் செய்வார்கள். மேலும் அறந்தாங்கி, ஆலங்குடி உள்பட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து திடீரென வரும் கர்ப்பிணிகளுக்கு அவசரமாக அறுவை சிகிச்சையும் செய்வார்கள். ஆனால், தற்போது 8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் 2 பேர் கரோனா உள்ளிட்ட காரணங்களால் விடுப்பில் உள்ளதால், மீதமுள்ள 6 மருத்துவர்கள் மட்டும் தலா 2 பேர் வீதம் சுழற்சி முறையில் பணியில் இருக்கிறார்கள்.
இதனால் மருத்துவர்களும், மருத்துவப்பணியாளர்களும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதனால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 15 அனுபவமுள்ள அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் உள்ளதால் அவர்களை வாரத்திற்கு ஒரு மருத்துவரை மாற்றுப்பணிக்கு இராணியார் மருத்துவமனைக்கு அனுப்பினால் எந்த பதற்றமும் இல்லாமல் பிரசவ அறுவைச் சிகிச்சை செய்யலாம். அசம்பாவிதங்கள் நடக்காமலும் தடுக்கலாம். அதே நேரத்தில் விரைவில் பற்றாக்குறையுள்ள மருத்துவர்களையும், மருத்துவப்பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். மேலும் இராணியார் மருத்துவமனைக்கான தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாததால் நகராட்சியில் இருந்து சிறிய டேங்கரில் தண்ணீர் வருகிறது. அதனால் தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது. இவற்றை எல்லாம் அரசு சரி செய்தால் நல்லது’ என்றனர்.
ஒரு பணியாளர் நம்மிடம் ரகசியமாக சொன்ன தகவல் இது; ‘இப்படி தொடர்ந்து கர்ப்பிணிகள் இறப்பதால் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரனிடம் ஞாயிற்றுக்கிழமை முறையிட்டோம். புதன் கிழமைக்கு பிறகு இறப்புகள் இருக்காது என்று முனீஸ்வரன் உத்தரவு கொடுத்திருப்பது ஆறுதலாகவும் நிம்மதியாகவும் உள்ளது’ என்றார்.