
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் சுமார் 40ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக மேட்டுப்பட்டி பகுதி மக்களுக்காக ராமநாதபுரம் செல்லும் சாலையில் ஒரு பொது மயானமும் (சுடுகாடு) கீழக்கோட்டை பகுதி மக்களுக்காக சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் ஓடை ஓரம் ஒரு பொது மயானமும், செக்காபட்டி பகுதி மக்களுக்காக ஆரியநல்லூர் செல்லும் வழியில் ஒரு மயானமும், பட்டியலின சமுதாய மக்களுக்காக (அருந்ததியர்) சத்யா நகர் அருகே இரு மயானமும் உள்ளது.
இதில் கீழக்கோட்டை மற்றும் மேட்டுப்பட்டியில் உள்ள பொது மயானங்கள் இரண்டிலும், புல் முட்செடிகள் முளைத்து இறந்தவர்களை அடக்கம் செய்யமுடியாத நிலை உள்ளது. மேலும், கீழக்கோட்டை மயானம் முழுவதும் முட்செடிகளால் ஆக்கிரமித்து இருப்பதால் இறந்தவர்களை மயானத்தின் உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலையும் உள்ளது. மேட்டுப்பட்டி மயானத்தின் உள்ளே பேரூராட்சி நிர்வாகம் குழி தோண்டி டன் கணக்கில் குப்பை கழிவுகளை குவிக்கப்பட்டிருக்கிறது. இரவு நேரங்களில் குப்பைக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியில் உள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, குப்பைக் கழிவுகளை எடுத்துச் சென்று பராமரிக்கவும், குப்பைக் கழிவுகளை கொட்டவும் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தை ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தார். ஆனால், பேரூராட்சி நிர்வாகம் அந்த இடத்திற்கு குப்பைக் கழிவுகளை கொண்டு செல்லாமல் சின்னாளபட்டி கீழக்கோட்டை மயானம் அருகே உள்ள காந்திகிராமம் ஓடை பாலத்தின் அடியிலும் மேட்டுப்பட்டி பொதுமயானம் எதிரே இராமநாதபுரம் செல்லும் சாலை ஓரத்திலும் குப்பைக் கழிவுகளை மலைபோல் குவித்து வைத்துள்ளது. இதனால் எ.ராமநாதபுரம் செல்லும் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் அப்பகுதியை கடக்க முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். இதுபோல கீழக்கோட்டை பைபாஸ் சாலையில் செல்லும் காந்தி காலனி, கலைமகள் காலனி மற்றும் நேருஜி காலனி மக்களும் கீழக்கோட்டை பொதுமயானத்தை கடக்கும் போது மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லும் நிலையில் உள்ளனர். இந்த இரு இடங்களிலும் மாலை நேரங்களில் நாய்கள் கூட்டமாக வந்த குப்பைக் கழிவுகளை உண்ண வரும்போது அப்பகுதியில் செல்லும் பொதுமக்களை விரட்டி கடித்துவிடுகின்றன. இதனாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் பொதுமயானங்களில் குப்பைக் கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சின்னாளபட்டி நகர பா.ம.க நகர செயலாளர் மருதமுத்துவிடம் கேட்டபோது, “திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சின்னாளபட்டியில் செயல்படுகிறதா என்று கேள்விக்குறியாகி வருகிறது. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் முறையாக வளம்மீட்பு பூங்காவான உரக்கிடங்கிற்கு எடுத்துசெல்லாமல் சாலை ஓரத்தில் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு வியாதிகள் வருகிறது. எ.ராமநாதபுரம் செல்லும் சாலையில் பொது மயானம் அருகே குப்பைக் கழிவுகள் மலைபோல் குவிந்திருப்பதால் மாலை நேரங்களில் சின்னாளபட்டியில் உள்ள பள்ளிகளில் படித்துவிட்டுச் செல்லும் மாணவ-மாணவியர்கள் அப்பகுதியை கடக்க முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். இதுபோல கூலி வேலைக்கு வந்து விட்டு செல்லும் பெண்களும் சிரமப்படுகின்றனர். மேலும் மேட்டுப்பட்டி மயானம் உள்ளே காம்பவுண்ட் சுவர் அருகே டன் கணக்கில் குப்பைகளை குவித்துள்ளனர். மயானம் முழுவதும் கழிவுநீர்கள் குளம்போல் தேங்கி நிற்பதால் இறந்தவர்களை அடக்கம் செய்ய குழிதோண்டும்போது ஏற்கனவே அடக்கம் செய்தவர்கள் உடல் மக்காமல் அழுகிய நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மேட்டுப்பட்டி பொது மயானத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல கீழக்கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள பொது மயானம் அருகே பாலத்தின் அடியில் குப்பைகளை குவித்து தீ வைத்து எரித்து வருகின்றனர். பொது மயானங்களில் உள்ள குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தாவிட்டால் பா.ம.க சார்பாக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்றார்.
எ.ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீராச்சாமியிடம் கேட்டபோது, “மேட்டுப்பட்டியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் பொது மயானம் எதிரே குப்பைக் கழிவுகளை குவித்து தீ வைத்து எரிப்பதால் எங்கள் கிராம மக்கள் (எ.ராமநாதபுரம்) அப்பகுதியை கடக்க சிரமப்படுகின்றனர். தீ வைத்து எரிக்கும்போது வரும் புகையினால் கண் எரிச்சல் நோய்க்கும் ஆளாகின்றனர். சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை அகற்றாவிட்டால் எங்கள் கிராம மக்களிடம் பேசி ஒருமனதாக முடிவு செய்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளி எடுத்து வந்து பேரூராட்சி அலுவலக வாசலில் கொட்டிவிட்டுவோம்” என்றார். மேலும் அவர், “தமிழக அரசு திடக்கழிவை மேம்படுத்த ஒவ்வொரு பேரூராட்சிக்கும் மாதம்தோறும் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மையை முடக்கும் வகையில் குப்பைகளை சாலையின் ஓரம் குவித்து தீ வைத்து எரித்து வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தாவிட்டால் பொதுமக்கள் பலவித நோய்களுக்கு ஆளாகிவிடுவார்கள்” என்றார்.