திருச்சி மாநகராட்சி 49வது வார்டில் திமுக சார்பில் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டச் செயலாளர் கமால் தலைமையில் நடைபெற்றது. அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்குவதற்காகச் சென்றார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு தங்களது பகுதியில் சரிவர குடிநீர் வரவில்லை மற்றும் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டதாக கூறி முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு, அருகிலுள்ள கோ - அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் வினோத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும், பொதுமக்களிடம் வினோத்தை காட்டி, எந்தக் குறை இருந்தாலும் இவரிடம் கூறுங்கள் என்று சொல்லிக் கடந்து சென்றார். பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.