கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கடும் கண்டனம் எழுந்துவரும் நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் இன்று (20.07.2021) டெல்லிக்குச் சென்று தங்களுடைய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தாங்கள் அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து விவசாயிகள், தங்களை டெல்லிக்குச் செல்ல காவல்துறையும் அரசும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கரூர் பைபாஸ் சாலையில் படுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் கரூர் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும் பாதிப்படைந்தனர். காலை அலுவலக நேரம் என்பதால் அலுவலகத்திற்குச் செல்லும் பல வாகன ஓட்டிகள் அய்யாக்கண்ணுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் காவல்துறையினர், பொது மக்களையும் விவசாயிகளையும் சமாதானப்படுத்தியதோடு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.