கரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு அரசு உடனடியாக 7,500 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கடந்த 5 மாதங்களாக கரோனா ஊரடங்கால் தினக்கூலிகள் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களைப்போலவே புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வேலையின்றி தவித்துவருகின்றனர். அவர்களின் குடும்பங்களுக்கு 7,500 ரூபாய் நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல விவசாயிகளின் வங்கிக்கடன், கூட்டுறவு கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டமான 100 நாள் பணியை 200 நாட்களாக அதிகரித்து நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்த கோரிக்கைகளை தாமாகவே முன்வந்து செய்திடாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.