கடலூர் மாவட்டம், சிதம்பரம் மேலவீதி காய்கறி மார்க்கெட்டை உழவர் சந்தைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் இன்று (17/06/2022) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் மேலவீதியில் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கே 150- க்கும் மேற்பட்ட காய்கறி, தேங்காய், பழக்கடை உள்ளிட்ட பல்வேறு விதமான கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 100 கடைகள் தனியார் இடத்திலும், 50 கடைகள் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ளது,
இந்த நிலையில், நகரத்தின் மையப் பகுதியில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டை சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இந்த மார்க்கெட்டை அமைக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சிதம்பரம் மேலவீதி காய்கறி வியாபாரிகள் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் இதே இடத்தில் புதிய கடைகளை கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இன்று (17/06/2022) காய்கறி மார்க்கெட்டை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் காலை முதல் காய்கறி வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிதம்பரம் மேலவீதி அனைத்து கடைகளும் உள்ள பகுதி இந்த இடத்திலிருந்து காய்கறி மார்க்கெட்டை மட்டும், தனியாக பிரித்தால் பொதுமக்கள் சிரமம் அடைவார்கள். எனவே, இதே இடத்தில் காய்கறி மார்க்கெட்டை கட்டித்தர வேண்டும் அரசு சரியான முடிவு எடுக்க வில்லை என்றால் அடுத்த கட்டத்தை நோக்கி போராட்டம் செல்லும்" எனக் கூறினார்.