கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை பணிகள் பல இடங்களில் முடிந்தும் கலியபெருமாள் கோவில் தெரு, கோவிந்தசாமி தெரு,கொத்தங்குடி தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்கு தோண்டிய பள்ளங்களால் மழை நேரங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளது.
இதுகுறித்து மாதர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட நகரிலுள்ள பொது மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நேரிலும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சாலை அமைக்கும் பணி நடைபெறாததை கண்டித்தும் சாலையை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காரிய பெருமாள் கோவில் தெருவில் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
மாதர் சங்கத்தின் சிறப்பு தலைவர் ஞானமணி தலைமை வகித்தார். மாதர் சங்க தலைவர் மல்லிகா, செயலாளர் அமுதா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராஜா மாவட்ட குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், முத்து உள்ளிட்ட நகர் குழு உறுப்பினர்கள் கட்சியினர் கலந்துகொண்டு நகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் முருகேசன், நகராட்சி பொறியாளர் மகாதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு லாரி மூலம் செம்மண் வரவழைத்து சேறும் சகதியுமாக உள்ள இடத்தில் போட்டனர். மேலும் உடனடியாக தார் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெறும் என்றும் உறுதி அளித்தனர் இதனைத்தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.