மக்கள் கருத்தை கேட்காமல் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அறப்போர் இயக்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் நிறைவடையும் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்காத தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் ஜூலை 10ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று நடைபெறும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தில், லோக் ஆயுக்தா சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், "மக்கள் கருத்தை கேட்காமல் லோக் ஆயுக்தா சட்டத்தை இன்று சட்ட சபையில் நிறைவேற்ற கூடாது" என்ற கோரிக்கை விடுத்து, தலைமை செயலகம் எதிரில் அறப்போர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் மற்றும் அக்தர், பிரசாந்த், சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பாளர் சிவ இளங்கோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.