தலைவாசல் அருகே ஜல்லிக்கட்டு சதிகல்லை பாதுகாக்க கோரிக்கை
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே சிவசங்கராபுரம் கிராமத்தில் உள்ள ஜல்லிக்கட்டு சதிகல்லை பாதுக்காக்க சேலம் வரலாற்று ஆய்வு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் பொன். வெங்கடேசன் தலைவாசல் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது பட்டுதுறையிலிருந்து சிவசங்கராபுரம் செல்லும் வழியில் பெரியசாமி கோயில் அருகே தமிழரசன் என்பவர் வீட்டருகே ஒரு ஜல்லிக்கட்டு சதிகல் பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது. முன்பு விளை நிலத்தின் நடுவே இருந்த ஜல்லிக்கட்டு நடுகல் இப்போது தண்ணீர் தொட்டியின் அருகே மாடு கட்டும் இடத்தில் கிடத்தப்பட்டு சிதையும் நிலையில் உள்ளது.
பழங்காலத்தில் இருந்தே தமிழகர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் மாடுபிடி சண்டை நடந்து வந்திருக்கிறது. பல்லவர் காலத்திலிருந்தே ஆநிரை கவர்தல் என்பது போரின் முன்னோட்ட நிகழ்வாக இருந்துள்ளது. ஆநிரை கவரும்போதும் அதை மீட்கும் போதும் இறந்த வீரர்களுக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. பல நடுகற்களில் இறந்தவர்களின் பெயர் ஊர் போன்றவை கல்வெட்டுகளாய் காணப்படுகிறது. வாணர் குலத்தை சேர்ந்த பலரின் நடுகற்கள் செங்கம் திருவண்ணாமலை பகுதியில் காணப்படுகிறது. வாணர் குலத்தை சேர்ந்த வாணகோவரையர்கள் ஆறகழூரை தலைநகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டு வந்தனர். இவர்கள் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு, நாயக்க மன்னர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்து வந்துள்ளனர். விஜயநகர பேரரசின் கீழ் வாணகோவரையர் ஆட்சி செய்த போது சிவசங்கராபுரம் பகுதியில் நடந்த ஏறுதழுவல் நிகழ்சியின் போது இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும். கணவன் இறந்தவுடன் மனைவியும் உடன் கட்டை ஏறியுள்ளார். எனவே இது ஒரு சதி கல்லுமாகும்.
165 செ.மீ அகலம் 135 செ.மீ உயரமுள்ள பலகை கல்லில் புடைப்பு சிற்பாக உருவங்கள் வெட்டப்பட்டுள்ளது. காளையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றை இரு வீரர்கள் பிடித்தப்படி உள்ளனர். வீரன் ஒருவன் காளையின் கொம்புகளை பிடித்தபடி காட்டப்பட்டுள்ளான். வீரன் அருகே ஒரு பெண்ணும் சிறுவனும் காட்டப்பட்டுள்ளனர். பெண்ணின் கையில் காப்பு காட்டப்பட்டுள்ளது. தான் சுமங்கலியாக இருப்பதை உணர்த்தி கையை உயர்த்தியுள்ளார். எனவே இது சதிகல்லுமாகும். எருது சிற்பத்தின் கீழ்பகுதியில் மூன்று உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. பெண் ஒருவர் கைகளை உயர்த்தியபடி நிற்கிறார். அடுத்து ஒருவர் மேளம் போன்ற இசைக்கருவியை வாசிக்கிறார். அடுத்த ஒருவர் சற்று குனிந்த நிலையில் பறை போன்ற கருவியை இசைக்கிறார். இறந்த வீரன் சொர்க்கம் செல்வதை வழி அனுப்புவது போல் காட்சி அமைந்துள்ளது. காளையை அடக்கியோ அல்லது காளையை மீட்டோ வீரன் உயிர் இழந்திருக்கலாம். சிற்பம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். நடுகல்லில் எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை.
தமிழரின் வீரத்துக்கு ஆதாரமாய் உள்ள இந்த நடுகல்லானது பராமரிப்பின்றி இப்போது அழியும் நிலையில் உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த நடுகல்லை சேலம் அருங்காட்சியகத்துக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும். இவ்வாறு ஆய்வாளர் கூறினார்.
-இரா. பகத்சிங்