நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகள் ஒன்றிணைந்து, தேவாலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக, திமுக, அமமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும், தலைவர்களும் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியோ,
"நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார் என்ற உந்துதலில் காவி அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தேவாலயங்களை தாக்குகின்றார்கள்.
கிறிஸ்துவர்கள் தான் நம் நாட்டிற்கு கல்வியையும், மருத்துவமனைகளையும் கிராமங்கள் வரை கொண்டு சேர்த்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் மூலம், வட இந்தியாவில் உள்ள பெரும்பாண்மை மக்களை அணித்திரட்டலாம் என நம்புகிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்.
ஆனால், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்ளுக்கும் பெரும்பான்மையான இந்து சமூதாய மக்கள் தான் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
இந்து ஏக்தா மர்ச் என்ற அமைப்பினர் காஷ்மீரில் கோவிலில் வைத்து 8 வயது குழந்தை ஆசிபாவை சீரழித்து இருக்கிறார்கள். இந்த படுபாவிகளுக்கு ஆதரவாக பாஜகவின் அமைச்சர்களே பேசுவதும், ஆதரவாக செயல்படுவதும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆனால், இந்த நாட்டில் உள்ள இந்துகளும், உலக மக்களும் இரக்கமற்ற அந்த கொடுமையை கண்டித்திருப்பதை பி.ஜே.பி நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு ஆறுதலாக இருக்கிறது.
காவிகளை வீழ்த்த, நாட்டை பாதுகாக்க எல்லா சமூக மக்களும் அணிதிரள வேண்டும்," என பேசினார்.