![kaja](http://image.nakkheeran.in/cdn/farfuture/I0u4-7NmdVqeFujeSIcy8rsHoQt8KUjY2VmtWjupnWE/1542221644/sites/default/files/inline-images/77_2.jpg)
கஜா புயல் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், 'கஜா' புயல் எதிரொலியாக, பலத்த மழை நீடித்தால், ஏரியின் கரை சேதமடைவதை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை மாதாவரம் ரெட்டேரி ஏரியில் இருந்து, குறிப்பிட்ட அளவு நீரை வெளியேற்ற, பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
முழு கொள்ளளவான, 0.32 டி.எம்.சி., அளவிற்கு, தண்ணீர் இருப்பு இருந்தது. அதனை வெளியேற்ற முடிவு செய்து, கடந்த திங்கள்கிழமை காலை 10:30 மணிக்கு, புழல், எம்.ஜி.ஆர்., நகர், நான்காவது தெரு சந்திப்பில் உள்ள கலங்கலின், 8 அடி அகலம் மதகை, 1.5 அடி உயரத்திற்கு திறந்தனர்.
தண்ணீர், உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேறியது. இதனைப் பாரத்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீர் வீணாவது குறித்து, மாநகராட்சி, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து தண்ணீர் தொடர்ந்து வந்தது. பின்னர் பொதுமக்கள் உயர் அதிகாரிகளுக்கு புகாராக தெரிவித்தனர். பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததையடுத்து மாலை, 4:00 மணிக்கு, ரெட்டேரி கலங்கல் உபரி நீர் கால்வாய் மதகின், 'ஷெட்டர்'கள் மூடப்பட்டன.
புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை யாரும் குறை சொல்லவில்லை. அதே நேரத்தில் வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது சில நேரங்களில் மாறவும் வாய்ப்புள்ளது. அதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, இருக்கிற தண்ணீரை வீணாக்காமல் என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்திருக்கலாம் என்றனர் அப்பகுதி மக்கள்.