சேலத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய கடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை (ஏப். 23) மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலர் யோகானந் தலைமையில் சுகாதார அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகள், செவ்வாய்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் தெரியவந்தது. அரசு அனுமதித்துள்ள மைக்ரான் அளவுக்கும் குறைவான மைக்ரான் அளவுள்ள பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள் என 1 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
அவற்றை விற்பனை செய்த, பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தும், விற்பனை செய்யும் கடைக்காரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.