தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்துவரும் நிலையில், முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் உணவின்றித் தவிக்கக் கூடிய ஏழை எளியவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் ‘தளபதி கிச்சன்’ திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இருவரும் இணைந்து துவக்கி வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி, நோய் தாக்கத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
நோய்த் தொற்று குறைவாக உள்ளவர்கள் சிகிச்சை பெறுவதற்கு கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் வசதியோடு கூடிய படுக்கை அறைகள் கொண்ட எட்டு சிகிச்சை மையங்கள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது கட்டமாக, தொற்று ஏற்பட்டிருக்கக் கூடியவர்களுக்கு கரூர் தலைமை அரசு மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரிகளும் அதற்கான சிகிச்சைகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
25ஆம் தேதி முதல் புதிய சிகிச்சை மையங்கள் எட்டு இடங்களில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய படுக்கை வசதி உள்ளடங்கிய சிகிச்சை மையம் தயார்படுத்தப்பட்டுவருகிறது என்று தெரிவித்துள்ளார்.