விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் சாட்சியாக உள்ள தேவாங்கர் கல்லூரி செயலர் ராமசாமி ஆகியோர் இன்று (12/03/2020) ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
காலை 10.30 மணிக்கு பூட்டிய அறையில் தொடங்கிய விசாரணை, உணவு இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்தது. மாலை 05.30 மணி வரை நீடித்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தபோது, கல்லூரி செயலர் ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.
விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய ராமசாமி, வயதின் காரணமாகவோ என்னவோ, மிகவும் களைப்புடன் காணப்பட்டார். வரும் 27- ஆம் தேதி மூவரும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றும் இதே ரீதியில் பூட்டிய அறையில் காலை முதல் மாலை வரை விசாரணை நடைபெறும் என்றார், இவ்வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர்.