
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றன. முருகேசன் என்பவர் இந்த கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பேராசிரியர் முருகேசன் திருமணம் ஆன மாணவிகளை தவறாக பேசுவதாக கூறிய வரலாற்றுப் பிரிவு மாணவ மாணவியர்கள் அவரை கண்டித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் உடனடியாக மாணவிகளை தவறாக பேசிய பேராசிரியர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
வரலாற்றுத் துறையில் படிக்கும் மாணவிகள் சிலருக்கும் திருமணமாகியுள்ளது. இருப்பினும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாணவிகள் கல்லூரிக்கு வருகை தந்து படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், பேராசிரியர் முருகேசன் திருமணமான மாணவிகளை பார்த்து, “கல்யாணம் பண்ணிட்டு நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற, வீட்டிலே இருக்க வேண்டியதுதானே... உன்னையெல்லாம் யார் படிக்க வர சொன்னா...” என்று பேசியதாக மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிலும், குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் மாணவி ஒருவர், அதனை பெரிதுபடுத்தாமல் படிப்பதற்காக கல்லூரிக்கு வந்ததாகவும், ஆனால் அந்த மாணவியை பார்த்து, “இந்த வயிற்றைத் தூக்கிட்டு நீயெல்லாம் எதுக்கு கல்லூரிக்கு வர்ற..’ என்று மனசாட்சியே இல்லாமல் பேசுவதாகவும் மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.