தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுரை கூறியுள்ளார்.
அண்மையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளிடம் முறையற்று நடந்தது, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு பள்ளிகளில் இதேபோல் துன்புறுத்தல்களுக்கு ஆளான மாணவிகள் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்துவருகின்றனர். புகார்களின் அடிப்படையில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை வலியுறுத்தி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி யாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய பாலகிருஷ்ணன் நேற்று (08.06.2021) தனியார் பள்ளிகளோடு ஆன்லைன் வழியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
அதில் தற்போது பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகுப்புகளையும் பள்ளி நிர்வாகம் பதிவுசெய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்போது அல்லது மாணவிகளின் செல்ஃபோன் எண்களைத் எடுத்து தனியாக அவர்களோடு பாலியல் தொடர்பான தகவல்களைப் பேசுவதோ அல்லது அவர்களை வேறு காரணங்களுக்காக வற்புறுத்துவதோ நடைபெற்றால் உரிய நடவடிக்கையைக் காவல்துறை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளைப் பள்ளி நிர்வாகம் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், ஆண் ஆசிரியர்களின் செயல்பாடு மாணவிகளிடம் எப்படி வெளிப்படுகிறது என்பதையும் அறிந்து பிரச்சினை எழுவதற்கு முன் அதனைச் சரி செய்திட வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.
மேலும், மாணவிகள் மீது தொடர்ந்து பாலியல் தொடர்பான தொந்தரவுகள் கொடுக்கப்பட்டால், புகார் தெரிவிக்க மாவட்டம் வாரியாக ஒரு அதிகாரியை நியமித்து, அவர்களுடைய செல்ஃபோன் எண்களையும் அவர் பதிவு செய்துள்ளார். எந்த நேரத்திலும் அதிகாரிகளை மாணவிகள் அழைத்து உதவி கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார்.