கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரியப்பட்டு பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றின் வேன் கவிழ்ந்து விழுந்ததில் மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தனியார் பள்ளி வேன் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பெத்தான் குப்பம் அருகே சென்ற பொழுது ரயில்வே கேட் போடப்பட்டதால் ரயில்வே கேட்டை ஒட்டி பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே இறங்கி உள்ளார். அந்த நேரத்தில் பேருந்தின் ஹேண்ட் பிரேக்கை உள்ளே இருந்த மாணவர்கள் ரிலீஸ் செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. அப்போது பேருந்து நகர்ந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. ஓட்டுநர் அந்த நேரத்தில் பேருந்துக்குள் இல்லாததே இந்த விபத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த எட்டு மாணவர்கள் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.