தனியார் கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகளைத் தற்காலிக மருத்துவ மனைகளாகவும், தனிமைப்படுத்தல் வார்டுகளாகவும் மாற்றக் கோரிய மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, பல தனிமைப்படுத்தல் பிரிவுகளை அரசு அமைத்து வருகிறது. ரயில் பெட்டிகள், கரோனா தனி வார்டுகளாக மாற்றப்படுகின்றன.
மருத்துவமனைகளில் உள்ள இடங்கள் மட்டும் போதுமானதல்ல என்பதால், அனைத்து தனியார் கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகளைத் தற்காலிக மருத்துவமனைகளாகவும், தனிமைப்படுத்தல் வார்டுகளாகவும் மாற்ற, அங்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும், சாலையோரம் வசிப்பவர்களையும் அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தன் மனுவில், ஊரடங்கு உத்தரவு காரணமாக, புலம் பெயர்ந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களும், வசிக்க இடம் இல்லாமலும், உணவு கிடைக்காமலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவி ஒன்றில் செய்தி ஒளிபரப்பானது. அந்தச் செய்தியில், அநாதைகளாகக் கைவிடப்பட்ட முதியவர்கள் பசிப்பிணி தாக்கி மயங்கிக் கிடந்ததையும், அந்தக் காட்சிகள் மிகவும் பரிதாபமாக இருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழகத்தில் பல தனியார் கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் உள்ளன. இவற்றை தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றுவதன் மூலம், 50 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்த முடியும். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குச் சொந்தமானவை என்பதால் சமூக பொறுப்புடன், அவற்றைத் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்ற ஒப்புக் கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை வீடியோ கால் மூலம் விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.