தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமை: உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: ராமதாஸ்
தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமை என்றும், மனித வாழ்க்கைக்கும், சுதந்திரத்திற்கும் அது மிகவும் என்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இதன்மூலம் தனிநபருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இந்தியாவில் தான் ஜனநாயக உரிமைகளும், தனிநபர் உரிமைகளும் மிகப்பெரிய பறிக்கப்படுகின்றன. அறிவியலும், தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதை விட தனிநபர் ரகசியங்களைத் திருடுவதற்காகத் தான் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு தனிநபரைப் பற்றி அவரது குடும்பத்தினருக்கே தெரியாத விஷயங்கள் கூட எங்கோ இருக்கும் பெருநிறுவனங்களுக்கு தெரிந்திருக்கின்றன. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ ஆதார் திட்டமும் உதவி செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆதார் தகவல்கள் கசியாது என அரசு கூறிவரும் போதிலும், இந்த தகவல்களை திரட்டுவதற்காக நியமிக்கப்பட்ட அமைப்புகளின் மூலம் ஏராளமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன என்பது உண்மை. தனிமையுரிமையைக் காப்பதற்காக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு முன்பாகவே நிலைமை எல்லை மீறி விட்டது.
ஆதார் குறித்து உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட, இந்தத் தீர்ப்பின் அடிப்படையை மதித்து தனிமையுரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.