Skip to main content

பள்ளிக் குழந்தையின் குறை தீர்த்த முதல்வர்

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

jlk

 

புதிய மாவட்டமான தென்காசி மாவட்டத்திற்கான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகவும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, மாவட்ட ஆய்வினை நடத்தும் பொருட்டு பொதிகை ரயில் மூலம் தென்காசி வந்த முதல்வர் ஸ்டாலின் குற்றாலத்தில் தங்கினார். சிறிது நேர ஓய்விற்குப் பின்பு விழா நடக்கிற செங்கோட்டைப் பகுதிக்கு வந்த முதல்வருக்கு திரண்டிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.

 

ஏறத்தாழ முதல்வர் ஸ்டாலின் மக்களின் வெள்ளத்தைக் கடந்து வரவேண்டிய சூழல்; விழா அரங்கினுள் வந்த முதல்வர், மக்களோடு மக்களாகப் பார்வையாளர் வரிசையிலிருந்த தென்காசிப் பகுதியின் ஆய்க்குடி அமர்சேவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் சங்கர ராமன் வீல் சேரில் அமர்ந்திருந்ததைப் பார்த்த உடன் அவர் அருகே சென்று வாஞ்சையுடன் அவரிடம் நலம் விசாரித்து விட்டு மேடைக்குச் சென்றார்.

 

மாவட்டத்திற்கு 239 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகள் பயனடைகிற வகையில் 182.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.

 

வடக்கே ஒரு காசி இருப்பதைப் போன்று தெற்கேயும் ஒரு காசியை உருவாக்க வேண்டும் என்று மன்னன் பராக்கிரம பாண்டியன் நினைத்து உருவாக்கியதுதான் தென்காசி கோபுரம். மன்னன் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் இங்கிருந்துதான் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றான். குறிஞ்சி, மருதம், முல்லை ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய குற்றாலம் இருக்கக்கூடிய, அதிகமான அருவிகளையும் அதிகமான அணைகளையும் உள்ளடக்கிய எழில் கொஞ்சும் மாவட்டமான தென்காசிக்கு வந்தபோது என் மனம் குளிர்ந்தது.

 

1755 ஆண்டே ஆங்கிலேயருக்கு வரி கட்ட முடியாது என்று மறுத்த மன்னன் பூலித்தேவன் பிறந்த மண். 1998ல் நெற்கட்டான் செவலில் மாவீரன் பூலித்தேவனுக்கு மணி மண்டபமும் சிலையும் அமைத்துக் கொடுத்த அன்றைய முதல்வர் கலைஞர், அம்மன்னனின் படைத்தளபதியாக இருந்த இந்த மண்ணின் மாவீரன் ஒண்டிவீரனுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததும் தலைவர் கலைஞர் தான். வீரம், இயற்கை, வேளாண்மை, ஆன்மிகத்திற்கும் பெயர் பெற்ற பூமி தென்காசி. பெருமிதமாக இருக்கிறது. அரசு சார்பில் குற்றாலத்தில் வருடம் தோறும் பண்பாடு கலாச்சார சாரல் விழாவும் நடக்கிறது. என்று பெருமைகளை எடுத்துரைத்த முதல்வர், மாவட்டத்திற்கு இதுவரை நடத்தப்பட்ட திட்டப்பணிகளின் புள்ளி விபரங்களைக் குறிப்பிட்டவர்.

 

இலத்தூரின் பெரிய ஏரி சுற்றுலாத்தலமாக்கப்படும், மாவட்டத்திற்குப் புதிய விளையாட்டரங்கம், ஆலங்குளம் நகரில் புதிய வேளாண் ஒழுங்கு முறைக் கூடம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தபோது கரவொலிகள் அமர்க்களப்பட்டன. இந்தப் பகுதியின் திப்பணம்பட்டி வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 3ம் வகுப்பு மாணவியான ஆராதனா எனக்கு ஒரு கடிதம் எழுதினார். என்னோட பள்ளியில அரசு மேல் நிலைப் பள்ளியும் இருக்கு. எங்க பள்ளி வளாகத்துல இட வசதியும் இல்ல. விளையாட்டு மைதானமும் கிடையாது. 

 

வகுப்பறை வசதியும் இல்லை உதவி செய்யுங்கய்யா... என்று எனக்கு எழுதியிருந்தார். அந்தக் குழந்தையின் கடிதம் கண்டு, எத்தகைய நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால் இந்தக் கடிதத்தை எழுதி இருப்பார் என நான் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். முதற்கட்டமாக அந்த பள்ளியில் 35 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்த முதல்வர், முதல்வருக்குத் தெரியப்படுத்தினால் கோரிக்கை நிறைவேறும் என்று எழுதிய அந்த மாணவியை நான் பாராட்டுகிறேன்.” என முதல்வர் ஸ்டாலின் மனநிறைவோடு வாழ்த்தினார். அந்த மாணவியின் தந்தை தங்கராஜ் அவர்களிடம் பேசியபோது. இப்படி நடக்கும்னு நாங்க நெனைக்கவேயில்ல என்றார் வியப்பாக.

 

 

சார்ந்த செய்திகள்