Skip to main content

நகைகளை ஒப்படைக்காத வங்கி; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

 primary agricultural cooperative society issue in kallakurichi district  

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தங்களது நகைகளை ஒப்படைக்கக் கோரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு  வங்கி முன்பு  விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2010 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 493 விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளுக்காக 1790 பவுன் தங்க நகைகளை அடமானம் வைத்திருந்தனர். அந்த நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறி திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

இதில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி அலுவலர் துணையுடன் நகை கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யுமாறு கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதன் காரணமாகக் கடந்த 12 ஆண்டுகளாக விவசாயிகளிடம் அவர்களது நகைகளை ஒப்படைக்காமல் அதிகாரிகள் காலந்தாழ்த்தி வந்தனர். இதனால் தங்களது நகைகளை ஒப்படைக்கக் கோரி விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் எடுக்கவில்லை.

 

இதனால் கோபம் அடைந்த விவசாயிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் நேற்று காலை திருநாவலூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகை இடுவதற்காக ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது சாலையின் குறுக்கே போலீசார் தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு வங்கி முன்பு திரண்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் திருநாவலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்டுறவு உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Attention Applicants for Cooperative Assistant Exam

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி (10.11.2023) அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கான எழுத்துத் தேர்வு வரும் 24 ஆம் தேதி (24.12.2023) கொளத்தூர் தொன் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, அண்ணா நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி, நந்தனம் அரசினர் கலைக் கல்லூரி, சேத்துப்பட்டு பச்சையப்பா கல்லூரி ஆகிய 6 மையங்களில் நடத்தப்படவுள்ளது.

இத்தேர்விற்கான அனுமதி நுழைவுச் சீட்டினை (Hall Ticket) நேற்று (18.12.2023) முதல் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் https://www.drbchn.In என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு chennaidrb@gmail.com மின்னஞ்சல் முகவரியையும், 044-2461 6503 மற்றும் 044-2461 4289 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனச் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர்கள் மறியல்  

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Three students lost their lives in an accident near Chinnasalem

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது உலகியநல்லூர். கடந்த 14 ஆம் தேதி இரவு அந்த ஊர் வழியாகச் சென்ற விவசாய டிராக்டர் மோதிய விபத்தில் 15 வயது இந்துமணி 17 வயது பச்சையப்பன் 18 வயது மணிகண்டன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தன்று இரவே டிராக்டர் ஓட்டுநர் அம்மாசி என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் டிராக்டர் உரிமையாளரைக் கைது செய்யக்கோரி இறந்து போன மாணவர்களின் உறவினர்கள், விருகாவூர் மும்முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி டூ விருத்தாசலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொட்டும் மழையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வாகன விபத்தில் பலியான மூன்று மாணவர்களின் உறவினர்களிடம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், பெயரளவிற்கு ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்று கூறினர். எனவே அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் உடன் இருந்தனர். சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.