Skip to main content

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் தற்கொலை; கணவனின் வீட்டு வாசலில் சடலத்தை புதைக்க முயன்ற உறவினர்கள்

Published on 30/04/2023 | Edited on 30/04/2023

 

Pregnant woman dowry incident in pudukottai ; The relatives tried to bury the body in front of the husband's house

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆன கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவரின் மகள் நாகேஸ்வரி (22) இவருக்கும் கீரனூர் துவரவயல் அருகே உள்ள மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி-விஜயா தம்பதியரின் மகன் அரவிந்த்திற்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனதிலிருந்து நாகேஸ்வரியிடம் அரவிந்த் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடிக்கடி நாகேஸ்வரி தயார் வீட்டுக்கு சென்றிருந்தார். மீண்டும் சமாதானம் பேசி கணவருடன் சேர்த்து வைத்திருந்தனர்.

 

இந்தநிலையில் தொடர்ச்சியாக அரவிந்த் மற்றும் அவரது தாய், தந்தை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நாகேஸ்வரி விஷ மருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரவிந்த் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்து உறவினர்கள் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் தனது மகளின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்காமல் உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். 7 மாத கர்ப்பிணியான நாகேஸ்வரி உயிரிழப்பால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

தொடர்ந்து போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பெண்ணின் சடலத்தை வாங்கிக் கொண்ட பெண்ணின் உறவினர்கள் அரவிந்தின் வீட்டிற்குச் சென்று அவரது வீட்டின் வாசலில் நாகேஸ்வரியின் சடலத்தையும், வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட ஆண் குழந்தையின் சடலத்தையும் புதைக்கும் செயலில் ஈடுபட முயன்றனர். காவல்துறையின் தடுப்பையும் மீறி கணவனின் வீட்டிற்கும் முன்பே குழி தோண்டி புதைக்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்தச் சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்