Skip to main content

“முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது” - அமைச்சர். மா.சுப்பிரமணியன்!

Published on 03/08/2024 | Edited on 03/08/2024
Precautionary measures are being taken" - Minister. Mr. Subramanian

காவேரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ள பெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவேரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ளபெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் உடனடியாக நேற்று (02.08.2024) 37 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று (03.08.2024) அவை 50 மருத்துவ முகாம்களாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. இந்த மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை என்பது வெள்ள நிலவரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்.

இந்த மருத்துவ முகாம்களில் சளி, காய்ச்சல், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு தேவைக்கேற்ப மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் 1056 பேர். ஈரோடு மாவட்டத்தில் 317 பேர், கடலூர் மாவட்டத்தில் 53 பேர், கரூர் மாவட்டத்தில் 30 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 பேர். தர்மபுரி மாவட்டத்தில் 35 பேர் என மொத்தம் 1,531 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களில் காய்ச்சல் இருமல் சளி தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் இருப்பின் அவற்றுக்கு தக்க மருத்துவ ஆலோசனையும் மருந்து மாத்திரைகளும் வழங்கப்படும்.

இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனையும், தொடர் சிகிச்சையும் வழங்கப்படும். இதற்காக பாராசிட்டமால் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் மற்றும் ஓ.ஆர்.எஸ் (ORS) பொட்டலங்கள் உரிய அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்பின் போது ஏற்படக்கூடிய காயங்கள், விஷக்கடி, பாம்பு கடி போன்ற நிகழ்வுகளுக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 108 அவசர ஊர்தி வாகனங்களும் மாவட்டம் தோறும் தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்