தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டக் குழுவின் சார்பில் இன்று, தஞ்சை ரயில் நிலையம் அருகில் 300 -க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறையைத் தூண்டிவிட்டு தடியடி நடத்தியதற்கும், கண்ணீர்ப் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதற்கும் மத்திய அரசைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் த.புண்ணியமூர்த்தி தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் எம்.மணி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற விவசாயிகளைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் தஞ்சையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது, “டெல்லியில் நீதி கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசின் கோரமுகம், உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
கனடா நாட்டின் பிரதமர் விவசாயிகள் போராட்டத்திற்குத் தானே முன்வந்து ஆதரவளித்த நிலையில், மோடி வாய்த் திறக்க மறுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. போராடுகிற விவசாயிகளிடம் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. கடும் குளிரிலும் உயிரைப் பணயம் வைத்து, கோடிக் கணக்கானவர்கள் போராடுகிறபோது, பிரதமர் மோடி வாய்த் திறக்காமல் மவுனம் காப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பிரதமர் மோடி உடனடியாக விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும். விவசாயிகளைக் கண்டாலே, ஏதோ எதிராளிகளைப் பார்க்கிற நிலையில், மோடி செயல்படுவது அவருக்கு நல்லது அல்ல. இந்த நடவடிக்கையை அவர் உடனடியாகக் கைவிட வேண்டும். போராட்டத்தினுடைய நோக்கத்தை உணர்ந்து, இந்தியா முழுமையிலும் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராட்டக் களத்திற்கு வரும் நிலையில், தானே முன்வந்து மத்திய அரசாங்கம் வேளாண் விரோதச் சட்டங்களைக் கைவிட முன்வரவேண்டும்.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த விவசாயிகளை அழிக்க நினைக்கும் மோடியின் செயல் ஏற்கத்தக்கதல்ல. விரல் விட்டு எண்ணக்கூடிய அதானி, அம்பானி போன்றவர்களுக்காக இந்திய விவசாயிகளைப் பலி கொடுக்கத் துணிவது மனித நேயமற்றச் செயல் என்பதை மோடி உணர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இந்தச் சட்டத்திற்கு, தமிழகத்தில் ஆளுகின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாராளுமன்ற மாநிலங்களவை ஆதரவளித்து, வெற்றி பெறச் செய்தது இந்தியாவில் தமிழக விவசாயிகளை வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது. எனவே பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்த கூட்டணிக் கட்சிகள் எல்லாம், இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறுகிற நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் இந்தச் சட்டத்தை திரும்பப்பெற மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.
போராட்டத்தில் தஞ்சை மண்டலத் தலைவர் அண்ணாதுரை, மாவட்டத் தலைவர் பாஸ்கரன், இளைஞரணி அறிவு, உள்ளிட்ட 300 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.