தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.
தொடர் கனமழை மற்றும் இடி மின்னல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சுமார் 135 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளது. அதில் உள்ள பீங்கான்கள் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் அதனை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதீத கனமழை காரணமாக சீர்காழியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுமார் 40 கிராமங்களுக்கு மின் இணைப்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்மாற்றிகள் பழுது காரணமாக மின்சார விநியோகம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் இன்று மாலைக்குள் நிலைமை சீர் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ள நீர் பகுதியில் இருக்கும் மின் கம்பம் ஒன்றில் மின்வாரிய ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.