Skip to main content

“காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்தை கர்நாடகத்திடமிருந்து பறிக்க வேண்டும்” - ராமதாஸ் 

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Power to deal with Cauvery dams should be taken away from Karnataka says Ramadoss

 

“காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்தை கர்நாடகத்திடமிருந்து பறிக்க வேண்டும்” என பாமக நிறுவனர்  ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காக்க காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி தமிழகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அறமும், மனசாட்சியும் இல்லாத கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அணைகளில் தேவைக்கும் அதிகமாகவே  தண்ணீர் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

 

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 22 ஆம் நாள் வரை காவிரியில் தமிழ்நாட்டுக்கு 73.01 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 23 டி.எம்.சிக்கும் குறைவான தண்ணீரையே கர்நாடக அரசு வழங்கியிருக்கிறது. இன்று வரை 50 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டியுள்ள நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி, வினாடிக்கு 10,000 கன அடி என்ற அளவில் கர்நாடகம் தண்ணீர் திறந்து வருகிறது. இந்த நீர் தமிழ்நாட்டின் பாசனத் தேவைக்கு போதுமானதல்ல எனும் நிலையில், இந்த நீரையும் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.

 

மற்றொருபுறம், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிரான மனநிலை நிலவுகிறது என்ற தோற்றத்தை உச்சநீதிமன்றத்திற்கு ஏற்படுத்தும் நோக்குடன் போராட்டங்களைத் தூண்டி விடுகிறது. தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்பது தான் கர்நாடகத்தின் நோக்கம் ஆகும். மழை & வெள்ளக் காலங்களில் உபரி நீரை திறப்பதற்கான வடிகாலாக மட்டுமே தமிழகத்தை கர்நாடகம் பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டுக்கு தேவையான காலத்தில் கர்நாடகம் ஒருபோதும் நீர் வழங்குவதில்லை.

 

தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தாலும் கூட, அந்த நீரை கொடுக்கும் இடத்தில் கர்நாடகமும், கெஞ்சிக் கெஞ்சி வாங்கும் இடத்தில் தமிழ்நாடும் இருக்கும் வரை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும்  இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கும் அதிகாரம் கர்நாடக அரசிடமிருந்து   பறிக்கப்பட்டு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அதன் உண்மையான பொருளுடன் செயல்படுத்தப்படும் என்பது உறுதி.

 

காவிரி நடுவர் மன்றத்தின் விருப்பமும் அது தான். காவிரி நடுவர் மன்றம் கடந்த 05.02.2007 ஆம் நாள் அளித்த இறுதித் தீர்ப்பில்,‘‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். காவிரியின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளின் இயக்கத்தையும் மேற்பார்வையிடும் அதிகாரம், அணைகளின் நீர் திறப்பை ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியவை காவிரி மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தது. ஆனால், அதை அப்போது இருந்த மத்திய அரசும், அதற்கு பிறகு வந்த மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளாததால்  தான், அணைகளை கையாளும் அதிகாரம் இல்லாத காவிரி ஆணையத்தை அமைக்கும் திட்டத்திற்கு  கடந்த 2016 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதுதான் தமிழகத்திற்கு பின்னடைவானது.

 

‘‘கடந்த கால வரலாறுகளில் இருந்து பார்க்கும் போது காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை என பெரும்பாலான ஆண்டுகளில் தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. அப்போதெல்லாம் போதிய அளவு மழை பெய்யாததால் தண்ணீர் திறக்க முடியவில்லை என கர்நாடகம் கூறியுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, எத்தகைய மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டாலும் அதற்கு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்’’ என்று நடுவர் மன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். நடுவர் மன்றத்தின் ஐயம் சரியானது; கர்நாடகம் இன்னும் திருந்தவில்லை என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளன. பழைய தவறுகள் இப்போதாவது திருத்தப்பட வேண்டும்.

 

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு  மாதிரியாக நடுவர் மன்றத்தால் கூறப்பட்டுள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக உள்ளது. இந்த வாரியம் தான் பக்ரா, நங்கல், பியாஸ் திட்டங்களின் அணைகளை இயக்கி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாலய பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகிய 7 மாநிலங்களுக்கு நீரையும், மின்சாரத்தையும் வழங்கி வருகிறது. 55 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பு எந்த சிக்கலும் இல்லாமல் நீரையும், மின்சாரத்தையும் பகிர்ந்தளித்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் 1991 ஆம் ஆண்டில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பும், 2005 ஆம் ஆண்டில் வழங்கிய இறுதித் தீர்ப்பும் கர்நாடக அரசால் ஓர் ஆண்டு கூட சரியாக செயல்படுத்தப்படவில்லை. அதனால் இப்போதைய அமைப்பு மாற்றப்பட வேண்டும்.

 

பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட்டிருப்பது போன்று, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.