தபால்துறை அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்தவர் அருணன். இவர், சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது: என் தந்தை, தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2003ம் ஆண்டு அவர் பணியில் இருந்த போதே இறந்துவிட்டார். இதையடுத்து தபால் துறையினரிடம் வேலை கேட்டு நான் மனு கொடுத்தேன். ஆனால் தபால் துறை அதிகாரிகள் முறைப்படி பரிசீலிக்காமல் நிராகரித்து விட்டனர். எனவே, எனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதிபதி மனுதாரருக்கு கருணை வேலை வழங்குவது குறித்து 3 மாதத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் விவகாரத்தில் தபால் துறையின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் தமிழக தபால் துறை தலைவர், தூத்துக்குடி தபால் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.