புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் போது அங்கு பாதுகாப்பு பணிக்காக சுமார் 800 போலிசார் குவிக்கப்பட்டனர். சில நாட்களில் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக போலிசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
அந்த பாதுகாப்பு பணியில் புதுக்கோட்டை ஆயுதப்படை ஆண் பெண் போலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது வெளியூர் போலிசார் திரும்பிவிட்ட நிலையில் புதுக்கோட்டை போலிசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அதில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த நந்தினி (21) என்ற பெண் காவலர் பல நாட்களாக பணியில் இருந்துவிட்டு இன்று மாலை பணி முடிந்த நிலையில் விடுப்பு கேட்டுள்ளார்.
பணி பதிவு செய்யும் ஒ.எஸ். எழுத்தர் அந்த பெண் காவலருக்கு விடுப்பு கொடுக்க முடியாது என்று மறுபடியும் பணி ஒதுக்க போவதாக சொன்னதால் விரக்தியடைந்த நந்தினி அந்த பணி எழுத்தர் முன்பு நான் ஆர்.ஐ. அலுவலகம் ( புதுக்கோட்டை ஆயுதப்படை பணிக்கு அனுப்பும் அதிகாரி.) முன்பு உள்ள கதவு கிட்ட போய் (விஷம்) குடிப்பேன் என்று 11 வினாடிகள் ஓடும் ஆடியோ பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு பூச்சி மருந்து குடித்துள்ளார்.
காவலர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அதன் பிறகு அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பணிச்சுமையை குறைக்க விடுப்பு கொடுக்காத்தால் பெண் காவலர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலிஸ் உயர் அதிகாரிகளும் புதுக்கோட்டையில் முகாமிட்டுள்ளனர்.