கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் திட்டத்தை அறிவித்ததோடு துவக்கியும் வைத்திருந்தார். இந்நிலையில், இன்று (26/12/2020) முதல், ரேஷன் அட்டைதாரர்கள், ரூபாய் 2,500, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை இன்று (26/12/2020) முதல், டிசம்பர் 30- ஆம் தேதி வரை வீடு தேடிச்சென்று ரேஷன் ஊழியர்கள் விநியோகிக்க உள்ளனர். ஜனவரி 4- ஆம் தேதி முதல் ஜனவரி 12- ஆம் தேதி வரை, ரூபாய் 2,500 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெறலாம். தமிழகத்தில் சுமார் 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, நல்ல துணிப்பையுடன், 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காயும் தரப்படும். வாங்காமல் விடுபட்டவர்கள் ஜனவரி 13- ஆம் தேதி பொங்கல் பரிசுத்தொகையுடன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் பொங்கல் டோக்கன் வாங்க போட்டா போட்டி நிலவியது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 1,389 நியாய விலைக்கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் மதுரையில் மட்டும் 9.26 லட்சம் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், மதுரையில் இன்று பல நியாயவிலைக் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்படவில்லை. இன்று அரிசி போன்ற பொருட்களின் விநியோகம் இருப்பதால், நேரத்திற்குத் தகுந்தபடி பொங்கல் டோக்கன் வழங்க ஊழியர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள ஜம்புராபுரம் பகுதிக்கு பொங்கல் பரிசு டோக்கன் வழங்க ஊழியர்கள் சென்றனர்.
இந்நிலையில் அவர்களை சூழ்ந்த மக்கள் கூட்டம் கரோனா, சமூக இடைவெளி என அனைத்தையும் மறந்து முண்டியடித்துக்கொண்டு போட்டா போட்டியுடன் டோக்கனை வாங்க முற்பட்டனர். வயதானவர்கள் சிலர் கீழே விழுந்தனர். கூச்சல் அதிகம் கிளம்ப, டோக்கன் வழங்கவந்த ஊழியர்கள் டோக்கனை கொடுக்காமலே பாதியில் சென்றனர்.