தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைச் சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு திட்டத்திற்காக தமிழக அரசால் ரூ.5 ஆயிரத்து 604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 பணமும், பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்களும் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த டிசம்பர் 20ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று முதல் (04.01.2021) பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது. முன்னதாக, அரிசி அட்டைதாரர்கள் எந்த தேதியில் பொருட்கள் வாங்க வரவேண்டும் என்பது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கினர். அதன் அடிப்படையில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 100 பேருக்கும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 100 பேருக்கும் என 2 பகுதிகளாகப் பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னை, அயனாவரம் பால் பண்ணை அருகே உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. தொடர்து காவல்துறையினரின் வழிகாட்டுதலில் பொதுமக்கள் வரிசையில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிச் செல்கின்றனர். அதேபோல், ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனி, மைலாப்பூர் ஆகிய பகுதிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.